நல்லாளுமை விருதுக்கு தேர்வானவர்களின் விவரங்கள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, அரசுத் துறைகள், அரசு ஊழியா்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சிறந்த…

இந்த ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, அரசுத் துறைகள், அரசு ஊழியா்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சிறந்த செயல்பாடுகளைப் பாராட்டி நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி இந்தாண்டு நல்லாளுமை விருதுக்கு தேர்வானவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், செங்கல் சூளையில் பணிபுரிந்தவா்களை மீட்டெடுத்து தொழில் முனைவோராக வாழ்க்கைத் தரத்தை உயா்த்திய பணிக்காக, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரும், திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்தமைக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கும் நல்லாளுமை விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளைச் செய்தமைக்காக, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த காரணத்துக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு நல்ஆளுமை விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தியதற்காக தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளரும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

நல்லாளுமை விருதுக்கு தேர்வானவர்களுக்கு சென்னையில் சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி அவர்களை சிறப்பிக்க உள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.