ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

பொது விநியோகப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் பேசினார். தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம்,…

பொது விநியோகப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் பேசினார்.

தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச்
செயலர் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுவாக கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் உற்பத்திப்
பொருள்களான மஞ்சள், எள், பருத்தி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொள்முதல்
செய்யப்படுகின்றன. அத்துடன், இங்கு மங்களம் எனும் பிராண்ட் பெயரில் மஞ்சள்
தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், ரசப் பொடி உள்பட14 வகையான மசாலா பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும்,ரேஷன் கடைகளிலும், வெளி விற்பனை நிலையங்களிலும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக வரும் லாபம் விவசாயிகளையே சென்று சேருகிறது. அதிகப்படியான விற்பனை வாய்ப்பு இருப்பதால் இதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு தனியார் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

சந்தையில் பல தனியார் நிறுவனங்கள் பிரபலமாக இருந்தாலும் இது அரசு நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க டி.ஜி.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் எஸ்.பி. தலைமையிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரேஷன் அரிசி கடைசியில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொதுமக்களும் அதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களுக்குத் தேவையான அளவில் மட்டுமே பொருள்களை வாங்கி கடத்தலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.