கேஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கண்டித்து தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்துமா என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான
கழகத்திற்கு சொந்தமான துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்
பாலாஜி ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட துணை மின் நிலையங்களில் மீண்டும் பாதிக்கப்படாதவாறு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை திரு.வி.க நகரில் மட்டும் 40 கோடியில் 110 KV மின் நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், ன்னையில் 1681 பில்லர் பெட்டிகள் தரை மட்டத்தில் இருந்து 1 மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மின் கட்டண உயர்வு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்
தங்கமணி பேசியதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 10
ஆண்டுகளில் மின்சார துறைக்கு ஏற்பட்ட இழப்பு, வட்டி உயர்வு எவ்வளவு என கேள்வி
எழுப்புகிறேன் என்றும் ,அதிமுக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக கடன் சுமை
ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தவில்லை என்று
கூறுகிறார்கள் ஆனால் 2012, 2013, 2014 இல் தொடர்ந்து 37% மின் கட்டணத்தை
உயர்த்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
அடி தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளதாக கூறிய அவர், கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் மத்திய அரசின் அழுத்தமே மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்றார்.
பாஜக கர்நாடகா மற்றும் குஜராத்தை கண்டித்து தான் போராட்டம் நடத்த வேண்டும்
எனவும், கேஸ், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு பாஜக நாளை
போராட்டம் நடத்துமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், சொந்த மின் உற்பத்தி
திட்டங்களை கடந்த அதிமுக அரசு தொடங்கவில்லை எனவும் வட்டி மட்டும் 12,600 கோடி
ஏற்பட்டுள்ளது. தனியாரிடம் கொள்முதல் செய்தால் மின் மிகை மாநிலம் என்று எப்படி
சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார்.
மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை பொறுத்தவரையில், மின் கட்டண அளவை எடுக்கும் பணியாளர்கள் தற்போது ஆயிரம் பேர் பணியாளர்கள் இருந்தால் அந்த திட்டத்திற்கு 2000 பேராக பணியாளர்கள் தேவைப்படுவார்கள் எனவும் தற்போது அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் விரைவில் மாதந்தோறும் கணக்கீடு செய்யும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.
ஒரே ஆண்டில் 70 % மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக 30% மீதம் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். அதிமுக பாஜக ஒன்றாக தேர்தலை சந்திக்கின்றனர். அப்படி போராட்டம் நடத்துபவர்கள் கேஸ், பெட்ரோல்-டீசல் விலையை கண்டித்தும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.
கேஸ் மானியதிற்கும் மின்சார மானியத்திற்கும் வித்யாசம் உள்ளது. அரசு 12500
கோடி மானியம் அளிக்கின்றனர். கேஸ் மானியம் போல நுகர்வோர் கட்டி திருப்பி
செலுத்துவது அல்ல என தெரிவித்தார்.








