அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி, மதுரை…

பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி,
மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பொன்னமராவதி கேசராபட்டி இடையிலான
சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கோயம்புத்தூர் செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்ட போது, இளைஞர்கள் மது அருந்திவிட்டு  அவ்வழியாக செல்லும் பெண்களை தகாத வார்த்தைகளால் கேலி செய்வதாகவும் , வேலைக்கு சென்று வீடு திரும்பும் கணவன் சம்பாதித்து வரும் பணத்தை மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்துவதாக இல்லத்தரசிகள் புகார் கூறினர்.

இப்பகுதியில் உள்ள இரண்டு மதுபான கடைகளும் 24 மணி நேரமும் மது வாங்கி செல்லும் நிலையில் உள்ளது. மேலும், தூத்தூர் ஊராட்சி மேற்கு திசையிலும், கிழக்கு திசையிலும் இரு மதுபான கடைகள் இருப்பதால் ஊராட்சிகுட்பட்ட இரண்டு மதுபான கடைகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் நலன் கருதி மதுபான கடைகளை அகற்ற  கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய மனுவுடன் ஆட்சியர் அலுவலகத்தை அனுகி இதற்கான தீர்வினை பெற முடியும் என கூறி போலீசார் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.