பொதுநல வழக்கு தொடுத்தவர் படுகொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!

திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுத்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்தவர் சர்புதீன்.…

திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுத்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்தவர் சர்புதீன். 34 வயதான இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். சமீப காலமாக அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். தொழில்ரீதியாக சர்புதீனுக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் இடையே சில காலமாக விரோதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சர்புதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் இதனால் சர்புதீன் மீது கோபம் கொண்டிருந்தனர். இது சம்மந்தமாக சிலர் சர்புதீனை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சர்புதீன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இது சம்பந்தமாக மேலும் விசாரணையை மேற்கொண்டு வந்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி சர்புதீன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அகமது பாஷா, பாருக், சலீம் பாஷா, அஷ்ரப் அலி மற்றும் சிலர் மீது திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார். புகாரின் தகவல்கள் அனைத்தையும் காவலர் பிரசாந்த் என்பவர் பாருக் என்பவரிடம் அளித்துள்ளார். இதனால் சர்புதீன் மீது மேலும் ஆத்திரமடைந்த அகமது பாஷா மற்றும் அவர் கூட்டாளிகளான சிலர் சர்புதீனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் பிரசாந்த்-யை சஸ்பெண்ட் செய்தார். காவலர் பிரசாந்திடம் போலீசார் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.