கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது தவறான முன்னுதாரணம் – டிடிவி கருத்து…!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய அவர், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது.

கரூரில் காவல்துறை தவறாக வழி நடத்தியதாக விஜய் கூறுகிறார். தற்போது காவல்துறை அமைச்சராக உள்ள விஜய் அக்குற்றச்சாட்டு மீது என்ன நடவடிக்கை எடுத்தார்…? . விஜய் கூறும் குற்றச்சாட்டு உண்மையா என்பது சிபிஐ விசாரணையில் தெரிய வரும். கரூர் பலியை பிறர் மீது போடுவது சரியாக இருக்காது. அச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கியது தவறான முன்னுதாரணம்.

கடந்த காலங்களில் முதலமைச்சர்கள் பொது வெளியில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதனை விஜய் பின்பற்றினால் நன்றாக இருக்கும். அவர் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். அதை சுட்டிக் காட்டினால் அவரும் அவருடன் உள்ள பரிவாரங்களும் கோபப்படுகிறது

விஜய் வீட்டிலிருந்து வெளியே வந்ததிலிருந்து வீட்டுக்குள் செல்லும் வரை ஒரு சினிமா சூட்டிங் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் சட்டமன்றம் உள்ளிட்ட பொது இடங்களில் ஒரு முறை கத்தி பேசுகிறார் ஒரு முறை பேசாமலும் இருக்கிறார். விஜய் தான் முதலமைச்சர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும், விஜயின் பேச்சில் அகம்பாவம், அகங்காரம் தான் தெரிகிறது

திரைத்துறை பிரபலம், சினிமா கவர்ச்சியை வைத்து தான் விஜய் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். அவர் ஒன்றும் 60 ஆண்டுகள் அரசியல் செய்யவில்லை. வெற்றி பெற்று விட்டேன் என்று அகம்பாவத்தில் மற்ற கட்சிகளை பேசுவது கண்டனத்திற்குரியது

திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க இருந்தார்கள், இரண்டு பேரும் கூட்டுக் களவாணிகள் என்கிறார்கள். நீங்கள் செய்ததும் களவாணித்தனம் தானே. ஆறு பேரை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம். அரசியல் சூழல் யாரையும் ஒன்று சேர்க்கும். விஜய்க்கு காங்கிரசு, உள்ளிட்ட ஆதரவு அளித்த கட்சிகள் மேல் நம்பிக்கை இல்லை. அதனால், தான் அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்து தன் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.