இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலை

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி, சேலை தயாரிப்பு பணியை துவக்க வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்தும் ஈரோட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர்…

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி, சேலை தயாரிப்பு பணியை துவக்க வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்தும் ஈரோட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர் அணி சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி தேசியக் கொடியுடன் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய கொடி ஏந்தி பேரணியாக சென்றனர்.

இதனை தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு நெசவாளர் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த விடியாத திமுக அரசு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை ரேஷன் கடை மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிக்க இதுவரை நூல் வாங்க டெண்டர் விடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை மக்களுக்கு வழங்க ஜூலை முதல் உற்பத்தி துவங்கும். அப்போது தான் ஐந்து மாதங்கள் உற்பத்தி முடிந்து ஜனவரி மாதம் மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்படும்.

ஒரு வேட்டி விலை ரூபாய் 70க்கும், சேலை விலை 200க்கும் வழங்கப்படும். இதன் மூலம் நெசவாளர்கள் ரூபாய் 486 கோடி பெறுவார்கள். ஆனால் இந்த முறை வெளிமாநிலங்களில்  வேட்டி, சேலை வாங்கி அதனால் பத்திலிருந்து இருபது சதம் வரை கமிஷன் பெற திமுக திட்டமிடுகிறது என்றார்.


எனவே பாஜக நெசவாளர் அணி உடனடியாக வேட்டி, சேலை உற்பத்தியை துவக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வழங்கும் இலவச மின்சாரத்தை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆக உயர்த்த உறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு பதில் யூனிட் மின்சாரம் 70 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாடினார்.

மேலும், இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இந்த அளவு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் விசைத்தறி குழுமம் அமைக்க 25 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக தமிழகத்தில் இந்த மானியத்தை யாரும் பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.