‘போட்டி அரசாங்கத்தைப் பிரதமர் நடத்துகிறார்’ – நாராயணசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்துக்கொண்டு போட்டி அரசாங்கத்தை மோடி நடத்துவதைப்போல் புதுச்சேரியில், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும், துணைநிலை ஆளுநர் சூப்பர் முதலமைச்சராகவும் செயல்படுவதாகப் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற காமராஜர் மற்றும்…

தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்துக்கொண்டு போட்டி அரசாங்கத்தை மோடி நடத்துவதைப்போல் புதுச்சேரியில், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும், துணைநிலை ஆளுநர் சூப்பர் முதலமைச்சராகவும் செயல்படுவதாகப் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற காமராஜர் மற்றும் ம.பொ. சிவஞானம் பிறந்த நாள் நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்து வருவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

மேலும், தனிமனித சுதந்திரம், இந்திய நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு ,வேலையில்லா திண்டாட்டம், கட்டாய மதமாற்றம், மதக் கலவரம் தொடர்பாகப் பேச விடாமல் பாராளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதாகவும், இந்தியாவில் படிப்படியாக ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும், மோடி அரசைத் தூக்கி எறிந்தால் தான் இந்திய நாட்டில் மறுபடியும் ஜனநாயகம் தலைதூக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் ஒன்று கூடி மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும் என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எந்தெந்த வகையில் தொல்லை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மோடி அரசு தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி மக்கள் பிரச்சனையைக் கையில் எடுத்து நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதற்கு பா.ஜ.க அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றுப் போட்டிகளின் விவரம்’

மேலும், பாரதிய ஜனதாவுடன் இணக்கமாக இல்லை என்ற காரணத்திற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், தான் முதலமைச்சராக இருந்த போது புதுச்சேரியில் இதே போன்று கிரண்பேடியை வைத்து தனக்குத் தொல்லை கொடுத்ததாகவும், அதேபோல், இப்போது ஆளுநரை வைத்துக்கொண்டு போட்டி அரசாங்கத்தை மோடி நடத்தி வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் பொம்மை ஆட்சி தான் நடைபெற்று வருவதாகவும், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும், துணைநிலை ஆளுநர் சூப்பர் முதலமைச்சராகவும் செயல்படுவதாகவும் கூறினார். மேலும், சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டு விட்டது எனத் தெரிவித்த அவர், மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை, பாஜக அளித்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.