திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் சுடுகாட்டிற்கு மாற்று
இடம் வழங்க கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தால்
இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தி வந்த சுடுகாடு பகுதி,
தற்பொழுது நெமிலிச்சேரி மற்றும் திருப்பதி இடையே சுமார் 364 கோடி செலவில்
அமைக்கப்படும், 6 வழிச்சாலை பணிக்காக எடுக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலை
பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காக்களூர் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிரிழக்கும் பட்சத்தில்
அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு சுடுகாடு இல்லை . மேலும், இதுவரை
நெடுஞ்சாலை துறையும் , தமிழக அரசும் மாற்று இடத்தை ஒதுக்கவில்லை. இதனால்,
அப்பகுதியில் இறந்த கார்த்திகேயன் என்பவரது உடலை, ஊர் மக்கள் ஊர்வலமாக
கொண்டு வந்து நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் சாலையின் நடுவில்
வைத்து எரித்து போராடினர்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும்
காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுடுகாட்டிற்கு மாற்று இடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்த தரப்படும் என
உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
—கு.பாலமுருகன்







