யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி, அதை உருவாக்கும் கருவூலமாக பள்ளிக்கூடங்கள் திகழ்கின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தை திறந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆர்ய சமாஜ் கல்விச் சங்கம் மூலம்
நிர்வகிக்கப்படும் இப்பள்ளி 3 ஏக்கர் பரப்பில் 5 ஆயிரம் மாணவர்கள் பயிலும் வகையில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் அரை நூற்றாண்டாக டி.ஏ.வி. பள்ளி கல்வி சேவையாற்றி வருகிறது. கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி விழாக்களில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு பெற்றுள்ளதால், நான் புத்துணர்வாக உணர்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்த கோபாலபுரத்தில் இதன் முதல் பள்ளி தொடங்கப்பட்டது. 1989 ல் இதன் 3வது பள்ளியை கருணாநிதி திறந்து வைத்தார்.
அனைத்து பள்ளிகளும் கல்விக் கண் திறக்கும் சாலைகளாக இருக்கின்றன. யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி தான். அதை உருவாக்கும் கருவூலம் தான்
பள்ளிக்கூடங்கள். இரு அரசுப் பள்ளிக்கு இந்த குழுமம் உதவி வருகிறது. இல்லம் தேடி கல்வி மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்கள் தயானந்தா சாமிகள் போல உண்மை, நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.
போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தனித்திறமை, அறிவாற்றல், நேர்மை, உண்மை இருந்தால் தான் வளர முடியும். தாய் மொழிக் கல்விக்கு ஊக்கமளிக்கும் விதமாக அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும். பள்ளிகள் தங்களது திட்டங்களுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் . தாய் மொழி மற்றும் தாய் நாட்டுப் பற்று அனைவருக்கும் முக்கியம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரதமர் முன்பு முதல்வர் பேசிய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு , இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபியில் 6 சதவீத ஜிடிபி பங்களிப்பு தரும் தமிழகத்திற்கு குறைவாகவே மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.
நிதி நெருக்கடியிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 36 , 895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடர்ன் தமிழகத்தின் தந்தை கருணாநிதி. கொள்கையில் சமரசமின்றி உழைக்கும் முதலமைச்சர் creator of modern tamilnadu -க்கு அனைத்திற்கும் அடிப்படை பள்ளிக் கல்வி தான். பள்ளியே கோயில், அதில் பயிலும் மாணவர்களே தெய்வம் என்று முதல்வர் செயல்பட்டு வருகிறார். மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து எடைபோடாமல், அவர்களது தனித்திறனை வெளிக்கொண்டுவர அரசு உதவும். அறம் சார்ந்த கல்வி முறையை உருவாக்கி , மாணவர்கள் படித்து முடித்த பிறகு பொருள் ஈட்டவும் உதவும் விதமாக கல்வி இருக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பிரதமர் முன்பாக முதல்வர் பேசிய கருத்துகள் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நட்புக்கு கைகொடுப்போம் , உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை முதல்வர் அந்த மேடையில் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசுடன் தனியார் பள்ளிகளும் இணைந்து செயல்பட்டால் ஒட்டுமொத்த கல்விமுறையும் மேம்படும் என தெரிவித்தார்.