பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார்.
இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்தப் படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பிரபு, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மோசலோ மோசலு என்ற பாடல் ஏற்கனவே யூ-டியூப் தளத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலை படக்குழு யூ-டியூப் தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அந்தப் பாடல் வாடி வாசல் எனத் தொடங்குகிறது. இந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். பென்னி தயால், ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நடனம் ராஜு சுந்தரம் அமைத்துள்ளார்.
பிரமாண்ட டிரைலர் வெளியீட்டு விழா!
இந்நிலையில், லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாலை 6 மணி தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய படங்களில் முன்னணி கதாநாயகிகளாக உள்ள பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஷரத்தா ஸ்ரீநாத், பாலிவுட் நடிகை ஊர்வசி ராதெலா (தி லெஜண்ட் படத்தின் கதாநாயகி), ஸ்ரீலீலா, யாஷிகா ஆனந்த், லட்சுமி ராய், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பிரான்ஸில் நடைபெற்றுவரும் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தி லெஜண்ட் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.








