ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு (84) பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
சண்டீகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மே 31 ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் இம்ரான் தர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஃபரூக் அப்துல்லாவுக்கு இந்த விவகாரத்தில் எதுவும் தெரியாது. அவர், விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தார். ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் மட்டும் குறிவைக்கப்படுவது ஏதோ தற்செயலாக நடைபெறுவது கிடையாது என்று அதில் இம்ரான் தர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஃபரூக் அப்துல்லாவிடம் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டிலேயே விசாரித்தனர். ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.113 கோடி முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் அதிகாரிகள், பொதுச் செயலர் முகமது சலீம் கான், முன்னாள் பொருளாளர் ஆசன் அகமது மிர்ஸா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலைவராக ஃபரூக் அப்துல்லா இருந்தபோது தனது பொறுப்பை தவறாக பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.








