செல்லரித்துப் போன பனை ஓலைகளில் கிடந்த சங்க இலக்கியங்களை,நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு
சோறுடைத்த சோழ நாடாம் தஞ்சையில் சூரியமூலை என்ற ஊரில்,1855 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று உ.வே.சாமிநாதய்யர் பிறந்தார்.பெற்றோர் உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர்- சரசுவதி அம்மாள்
தனது தொடக்க தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர்த் தன் 17-ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவரானார் உ.வே.சாமிநாதையர்.
அதன் பின்னர் கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். தமிழ்நாடு முழுவதும் பண்டிதர்கள், புலவர்கள், ஆலய மடங்கள், ஆலயங்கள் என இலக்கிய ஏடுகளை தேடித்தேடி அலைந்து, கண்டெடுத்து, தொகுத்து நூலாக்கினார் உ.வே.சா.
உ.வே.சா. 90 க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தார். 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்து ஏடுகளை சேகரித்தார். தமிழன்னைக்கு அணி செய்ததை போல், 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்களில், பலவற்றைத் தேடித்தேடி அலைந்து தொகுத்ததால் தமிழ்த் தாத்தா என உ.வே.சா சிறப்பிக்கப்படுகிறார்.
ஏட்டுச்சுவடிகளைப் பதிப்பித்தல் சவாலான பணி. சிதைந்த/ மறைந்த அடிகளையும் சொற்களையும் கண்டு ,ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு என நிறைவாக செய்தார். ஆங்கிலம் உலக வாழ்விற்கு, வடமொழி ஆன்மீக வாழ்விற்கு என்பவர்களிடம், என் அன்னை தமிழ் இவ்வுலக -அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது என்பார் உ.வே.சா.
1887 ஆம் ஆண்டு சீவகசிந்தாமணி – ஐ ஏட்டுச்சுவடியிலிருந்து, முதன் முதலாக நூலாக வெளியிட்டார் உ.வே.சா. தன் வாழ்வையே தமிழுக்காக அர்ப்பணித்துக்கொள்ள காரணம் நம் தமிழர்கள் அளித்த நல்லூக்கமும், ஆதரவும் தான் என்றால் மிகையில்லை என்றார் உ.வே.சா.
இளமையில் உ.வே.சா குடும்பம் தீராத வறுமையில் வாடிய போதும் வாய்ப்புகளைத் தேடி அலைந்து மனம் தளராமல் தமிழ் கற்றார். உ.வே.சா வின் தந்தை கம்ப ராமாயண சொற்பொழிவாற்றி வந்தார். உ.வே.சா. தந்தைக்கு உதவியாக சென்றார். இதனால் குடும்ப வருமானம் உயர்ந்தது.
படித்த புலவர்கள்,வித்துவான்களை யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்று ஏங்கினேன் என்கிறார் உ.வே.சா. சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும், பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோட உரை நிகழ்த்துவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ என்ற நூல்
உ.வே.சா. இல்லாவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரம் தெரியாமல் போயிருக்கும். அகநானூறு, புறநானூறு வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும்.

திருவாடுதுறை ஆதினத்துடனும், ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யிடமும் தமது இறுதிக் காலம் வரை அன்புடனும், பக்தியுடனும் இருந்தார் உ.வே.சா. உ.வே.சா தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். இது 1950-ஆம் ஆண்டில் நூல் வடிவம் பெற்றது.
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை வெளியிட்டு ஆசிரியர் மீதான அன்பை வெளிப்படுத்தினார் உ.வே.சா. இயற்றிய நூல்கள் கலைமகள் துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் ஆகும்.
உ.வே.சா. தமிழுக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி, மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இந்திய அரசு, 2006 பிப்ரவரி 18 அன்று உ.வே.சா நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942-இல் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை என பட்டியல் நீள்கிறது.
அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ.வே.சா 87 ம் வயதில் ,1942,ஏப்ரல் 28 அன்று இவ்வுலக வாழ்வை விட்டு புகழெய்தினார்.
– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்







