நடிகர் மயில்சாமியின் உடலுக்கு திரையுலக நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி

நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவிற்கு திரையுலக நட்சத்திர பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகிறனர் . 1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம்…

நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவிற்கு திரையுலக நட்சத்திர பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகிறனர் .

1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பலக்குரல் மன்னனாகவும் இருந்த மயில்சாமி, அரசியல் கட்சியினருக்கு மேடை பேச்சாளராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மயில்சாமி, தீவிர சிவன் பக்தர் ஆவார். இதனால் ஆண்டுதோறும் திருவண்ணாமலை மகா தீபத்தில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்த மயில்சாமி, நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இந்த திடீர் மறைவு திரையுல பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே மிகப்பெறிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயில்சாமியின் மறைவிற்கு நடிகர்கள் சரத்குமார், பார்த்தீபன், விக்ரம், செந்தில் ,மனோபாலா, ராதா ரவி, தாடி பாலாஜி, யோகிபாபு, வையாபுரி, நடிகர் சார்லி, நகைச்சுவை நடிகை கோவை சரளா, இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே செல்வமணி, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

மயில்சாமியின் மறைவிற்கு நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான மயில்சாமி மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இவரை தொடர்ந்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், உங்கள் இனிமையான வேடிக்கையான வழிகள் எப்போதும் நினைவில் இருக்கும் அன்பே மயில் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகர் யோகிபாபுவும் தனது இரங்கல் பதிவில், சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்து நன்கு தெரிந்தவர். பலருக்கும் உதவிக்கரம் நீட்டியவர். மயில்சாமியின் மறைவு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் நகைச்சுவையான நடிப்பால், அனைவரையும் மகிழ்வித்தவன். பாசத்துக்குரியவன். மயில்சாமி உன் மறைவு தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பு என்று இயக்குநர் பாரதிராஜா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ராதாரவி பின்னர் செய்தியாளர்களிடம் மிக உருக்கமாக பேசினார். அப்போது பேசிய அவர் “எம்ஜிஆரின் மிகப்பெரிய வெறியன், மயில்சாமியின் இழப்பு என்பது திரைத் துறைக்கே மிகப்பெரிய இழப்பு, நல்ல மனிதர் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர்”. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

அதேபோல் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அவரது சக நண்பரும், நகைச்சுவை நடிகருமான நடிகர் வையாபுரி கடந்த வாரம் கூட என்னை வந்து சந்தித்தார். இதுவரை ஒருமுறை கூட என்னோடு புகைபபடம் எடுத்துக்கொண்டதில்லை . ஆனால் அப்போது தான் முதன் முறையாக புகைப்படம் எடுத்தார். பசி என்று வருபவர்களுக்கு பாக்கெட்டில் இருப்பதை கொடுத்துவிடுவார். யாரு எவ்ளோ காசு கேட்டாலும் உடனே கொடுத்து உதவுவார். தீவிர சிவன் பக்தரான அவரை, சிவனுக்கு பூஜை பண்ண அங்கேயே அழைத்து சென்றுள்ளார்  என உருக்கம் தெரிவித்து உள்ளார்.

இவரை தொடர்ந்து நேரில் சென்று மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பார்த்தீபன், வாழ்நாள் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தவர். நல்ல மனிதர். அவரின் மறைவு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது ஆழ்ந்த இரங்கல் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய நடிகரும், இயக்குநருமான மனோபாலா மயில்சாமி போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. கொரோனா காலத்தில் பல உதவிகளை செய்தவர்.சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கிறார். அவர் இன்று நாமமோடு இல்லை என்று நினைக்கும் போது மனது வலிக்கிறது என்று தந்து இரங்கலை கூறியுள்ளார்.

மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நகைச்சுவை நடிகரான செந்தில், மயில்சாமி குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். அதேபோல் மயிலசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனது உருக்கமான இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

இதேபோல் நகைச்சுவை நடிகை கோவை சரளாவும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மிக உருக்கமாக பேசிய அவர், மனிதநேயமிக்க மனிதரை இழந்துவிட்டோம். கொரோனா காலத்தில் மிகுந்த மனித நேயத்தோடு பலருக்கும் பல உதவிகளை செய்துள்ளார். சிவ பக்தரான அவர் சிவராத்திரி அன்றே இறந்துள்ளது அந்த சிவனிடமே சென்றுவிட்டதாக நினைக்க தோன்றுகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

இவர்களை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவரான நாசர் அவர்களும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். இவரை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் ஜெயராம் அவர்களும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் மயிலசாமியுடன் நடித்த சக நகைச்சுவை கலைஞர்களான சிட்டுக்குருவி உள்ளிட்ட நடிகர்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.