அக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.   இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

 

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அக்னிபாத் என்ற புதிய திட்டம் கடந்த 14-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பின், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணியில் நீட்டிக்கப்படுவர். மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் அக்னிபாத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. அதே நேரத்தில், இளைஞர்களின் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பணியில் சேர விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன.

 

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்க்கும் நடவடிக்கை கடந்த 24-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் வீரர்களை சேர்ப்பதற்கான இணையவழி பதிவு நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த முறை ஆள்சேர்ப்பின் போது 6 லட்சத்து 31 ஆயிரத்து 528 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அக்னிபாத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு லட்சக்கணக்கானோர் விண்ணபித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.