ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் – தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

மின் கொள்முதல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், விவசாயிகளின் பிரச்சினைகள் எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் தற்போதைய மின் கொள்முதல் நடைமுறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், அரிசி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மின்சாரக் கொள்முதலில் முறைகேடு?

தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுவது அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதற்கு முன்பு திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு வாங்கப்பட்டதையே ஊழல் என்று விமர்சித்த விஜய், தற்போது அதைவிட அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கெனவே மின்சாரத் துறை கடன் சுமையில் உள்ள நிலையில், இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், செயற்கையாக மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டினார். ஆந்திர மாநில அரசு அக்டோபர் மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்ததாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ரூ.35-க்கு மின்சாரம் வாங்கும் நடவடிக்கையை ‘வெற்றி மெகா ஊழல் திட்டம்’ என விமர்சித்தார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவில்லை

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, அரிசி மற்றும் காய்கறிகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். விலைவாசி உயர்வு இல்லை என உணவுத்துறை அமைச்சர் கூறிவிட்டுச் செல்வதாகவும், தவெக அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை என்றும் சாடினார்.

மேட்டூர் அணை நீர் திறப்பால் பயனில்லை

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும், விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார். அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிகளைச் சென்றடையவில்லை என்றும் தெரிவித்தார்.

கட்சிகளை இணைப்பது குறித்த விமர்சனம்

பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை தவெக தொடர்ந்து அழைத்து வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியில் போதிய நிர்வாகிகள் இல்லாததால்தான் மற்ற கட்சியினரை இணைக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது திமுக கூட்டணியை ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என்று விஜய் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது அந்தக் கூட்டணியின் ஆதரவால்தான் தவெக ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். ஆட்சி மற்றும் அதிகாரத்திற்காக தவெக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்த கேள்வி

இடைத்தேர்தலில் தவெக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்திக்காமல் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற்றதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இடைத்தேர்தலின்போது தவெகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களே கூறியதாக அவர் தெரிவித்தார். தவெக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளே இடைத்தேர்தலில் அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐந்து நிமிடங்கள் பேசினாலே ‘கொத்து பரோட்டா’ என விமர்சித்தவர்கள், இடைத்தேர்தலின்போது தெருத்தெருவாகச் சென்றதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, உண்மையில் அவர்களுக்குத்தான் தாங்கள் அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இவ்வாறு தமிழக அரசின் மின் கொள்முதல், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது விமர்சனங்களை முன்வைத்தார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.