தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மருத்துவமனையில், காலையில் சேர்க்கப்பட்ட நபர் மதியம் பலியானதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன்(36),…

சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மருத்துவமனையில், காலையில் சேர்க்கப்பட்ட நபர் மதியம் பலியானதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன்(36), ஆட்டோ ஓட்டி
வந்தார். இவரது மனைவி லட்சுமி (30), இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ(7) என்ற மகளும்,
சர்வேஸ் (4), என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு குமரன்
மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள்
மோதியதில் குமரன் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் காயம்பட்ட அவரது காலில் இருந்து
ரத்தம் வடிந்ததால் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு இருந்த மருத்துவர்கள் குமரனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குமரனுக்கு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த நிலையில்  மதியம் திடீரென அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காலையில் சேர்க்கப்பட்ட நபர் மதியம் இறந்து போனதால் கடும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும் மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் தான் குமரன் இறந்து போனதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை வளாகத்தின் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மாங்காடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். காலையில் நல்ல நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் மதியம் இறந்து போனதாகவும் மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்து போனதாகவும் மேலும் அவர் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.