சிறையில் கைதி தூக்கிட்டு உயிரிழப்பு

கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள, டி.எடையார் பகுதியை சேர்ந்தவர், கலியபெருமாள். கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு படிக்கும்,…

கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள, டி.எடையார் பகுதியை சேர்ந்தவர், கலியபெருமாள். கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு படிக்கும், தனது மகளை, பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இது குறித்து அறிந்த கலியபெருமாளின் மனைவி, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 24.12. 2020 அன்று கலியபெருமாளை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில், கலியபெருமாள், தன் மகளை பலாத்காரம் செய்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. பெற்ற மகளையே பலாத்காரம் செய்த காரணத்தால், கலியபெருமாளை பார்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முயற்சி செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கலியபெருமாள்,கடலூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்  கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கலியபெருமாள் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.