பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தற்போது இயலாத காரியம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை கண்டறிவதில் சிரமம் உள்ளதாகவும், எனவே பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் தேசிய பார்வையற்றோர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “ தற்போது பல மதிப்பிலான நோட்டுகள் வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டு வருகின்றது. புதிதாக நோட்டுகள் வந்தால் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளை மீண்டும் அச்சிட ரூ.4,682.80 கோடி வருடாந்திர செலவாகும். புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் தற்போதைய செலவைவிட கூடுதல் செலவு ஏற்படும்.
மேலும், மீண்டும் புதிய நோட்டுகள் அச்சிடும்போது பார்வையற்றவர்களுக்காக தேசிய அளவில் இயங்கக்கூடிய அமைப்புகளின் ஆலோசனையை பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய பார்வையற்றோர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.







