டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் கூட்டம், பாஜகவின் ’பிரியாவிடை சந்திப்பு’ என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி தலைவருமான அஜித் பவாா் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
”பெங்களூருவில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணியை (இந்தியா) உருவாக்கியுள்ள அது நேரத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தனது கூட்டத்தை டெல்லியில் நடத்தியுள்ளது. இது ‘இந்தியா’ கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் இது பாஜகவின் பிரிவுபசார சந்திப்புக் கூட்டம். எதிர்க்கட்சிக் கூட்டணியின் பெயரிலேயே அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி என்ற பொருள் உள்ளது.
இது நம் நாட்டை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். பாஜக அணியினர் ‘இந்தியா’ என்ற பெயரை திரும்பத் திரும்ப பயன்படுத்தினர். அந்த பெயரை வைத்து நம்மை பயமுறுத்த நினைத்தனர். ஆனால் இப்போது இந்தியா என்ற பெயருக்கு பாஜக பயப்படுகிறார்கள். இந்தியா என்ற பெயர் அவர்கள் அமைதியை சீர்குழைத்தது. இந்த முறை மக்கள் அவர்களுக்கு பிரியாவிடை அளிப்பார்கள்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







