இசை உலகின் இளவரசன் ”யுவன் ”

“காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்” ஒரு இசை கலைஞருக்கு அவர் இசை அமைத்த பாடலையே வாழ்த்துரையாக கூற வேண்டும் என சொன்னால் யுவன் சங்கர் ராஜாவுக்கு நான் எழுதும் வரிகள் இதுவாக தான்…

“காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்”

ஒரு இசை கலைஞருக்கு அவர் இசை அமைத்த பாடலையே வாழ்த்துரையாக கூற வேண்டும் என சொன்னால் யுவன் சங்கர் ராஜாவுக்கு நான் எழுதும் வரிகள் இதுவாக தான் இருக்கும். சில லட்சம் காதலர்களை பல லட்சம் இளைஞர்களை சிலிர்க்க வைத்து, அழ வைத்து, உறங்க வைத்து, கிரங்க வைத்து பல நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. யுவனின் இசை என்றாலே சிலர் கூறுவது, மதுபழக்கம் குடிப்பழக்கம் எல்லாம் இல்லை, அதை விட சிறந்த போதையல்லவா யுவனின் மெட்டுக்கள் என்பர். அந்த அளவு இசையால் பல லட்சம் உள்ளங்களை கவர்ந்துள்ளார் யுவன்.

இளமை பருவம்

புகழ் பெற்ற இசையமைப்பாளரான இளையராஜாவின் இளைய மகன் யுவன். தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற யுவன் தனது தாயின் அறிவுரையை கேட்டு இசையில் ஆர்வம் காட்டினார். தான் எப்போதும் ஒரு விமானியாகவும், உலகம் முழுவதும் பயணிக்க விரும்புவதாகவும் கூறிய யுவன் தன்னை சுற்றியுள்ள இசையுடன் வளர்ந்ததால் இசை கலைஞரானார்.

தனது 14 வயதில் இருந்து இசையின் மீது ஆர்வம் செலுத்திய யுவன் 1997 ல் அரவிந்தன் என்கின்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் ட்ரைலருக்கு யுவன் அமைத்த இசை பலரையும் கவர்ந்தது. இதன் பாடல் இனிமையாக இருந்தாலும் படம் தோல்வி அடைந்ததால் அந்த படத்தின் பாடல்கள் அவ்வளவாக கவனிக்கவில்லை. அதன் பிறகு வந்த வேலை, கல்யாண கலாட்டா போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்திற்கு இசையமைத்தார். திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. ஒட்டுமொத்த ரசிகர்களும் யுவனை திருப்பி பார்க்க வைத்தது.

டேக்ஆப் ஆனது யுவனின் பயணம்

அதன் பிறகு தான் யுவனின் பயணம் டேக்ஆப் ஆனது எனவும் கூறலாம். முன்னதாக 2004ம் ஆண்டில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகி மனம் உருக செய்தது. இப்போதைய இளம் தலைமுறையின் நிம்மதியான உறக்கத்திற்கு யுவனின் இசையே காரணம் எனவும் கூறலாம். 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ”கண்பேசும் வார்த்தைகள் புரியவில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை”,  “நினைத்து நினைத்து பார்தேன்”, ”கனா காணும் காலங்கள்” போன்ற பாடல்கள் பலரின் உள்ளங்களை வெகுவாக கவர்ந்தது. காலம் கடந்து பயணிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

இசையில் மலர்ந்த நட்பு

நா.முத்துகுமாரின் வரிகள் என்றாலே தனி ஸ்பெஷல் தான். காதல் தோல்வியில் உள்ள, வருத்தத்தையும் வலிகளையும், எழுத்து வரிகளால் அள்ளி தந்திருக்கிறார். அவரின் வரிகளோடு சேர்ந்து யுவனின் இசையும் சேர்ந்து காதலிக்க தெரியாதவர்களுக்கு கூட காதலின் வலியை உணர செய்தன. அதனை தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டில் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை யுவன் சங்கர் ராஜா பெற்றார். மேலும் பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

நல்ல திரைப்படத்திற்கு திரைக்கதையோடு, இசை அடிநாதமாய் அமைகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பூவெல்லாம் கேட்டுப் பார், துள்ளுவதோ இளமை, மௌனம் பேசியதே போன்ற படங்களில் தொடங்கி நீண்ட இசை பயணத்தில் நீங்கா முத்திரை பதித்துள்ளார். காதல், இன்பம், சோகம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளிலும் இசையமைத்து டிவி, ரேடியோ, மொபைல் என பலரின் பிளேலிஸ்ட்களில் தினமும் இருப்பது யுவன் இசையே.

இசை உலகின் இளவரசன்

இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி ‘பியார் பிரேமா காதல்’, ‘ கொலையுதிர் காலம்’ போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். 35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று 42வது பிறந்தநாள். தனது ஒப்பற்ற இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டா யுவன், “இசை உலகின் இளவரசன்” என்றால் மிகையாகாது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.