கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சென்னை விமான நிலையத்தில் 1,200 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பல்லாரவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே, நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் 8.45 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். தொடர்ந்து அவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு ஓய்வெடுத்தார்.
பிரதமர் மோடி இன்று காலை கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பார்வையிட்டார். வனப்பகுதியில் 20 கிலோமீட்டர் சென்ற பிரதமர் மோடி புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்வையிட்டார்.
இதனைதொடர்ந்து, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். பின்னர், சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடத்த பொம்மன் – பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.







