பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புடன், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி இன்று (ஜன.19) சென்னையில் தொடங்கி…

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புடன், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி இன்று (ஜன.19) சென்னையில் தொடங்கி வைத்தார்.   இதனைத் தொடர்ந்து நாளை (ஜன.20) திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார்.  பின்னர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.  இதனையொட்டி இந்த மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி புனித தலமான ராமேஸ்வரத்தில் புனித நீராடி இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார்.  பிரதமர் ராமாயணத்துடன் நெருக்கமான தொடர்பினை கொண்ட ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தீர்தம் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்.   இந்நிலையில் ஜன.20-ம் தேதி அன்று பிற்பகல் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்கிறார்.

அன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கும் பிரதமர், மறுநாள்
காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் புனித நீராடுவதுடன், வழியில் உள்ள
கோதண்டராமர் கோயிலிலும் வழிபாடு செய்கிறார்.   பிரதமர் மோடி வருகையினை முன்னிட்டு நாளை (ஜன.20) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  விஜயகுமாரின் ‘ஃபைட் கிளப்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களிலும் ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  இரு நாட்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதே போல் நாளை (ஜன.20) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகிய இடங்கள் சிறப்பு பாதுகாப்பில் உள்ளன.  ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும்ஏடிஜிபி, ஐ ஜி, டி ஐ ஜி, காவல் கண்காணிப்பாளர் என மூன்றடுக்கு பாதுகாப்புடன் சுமார் 3400 போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் அருகே அமிர்தாபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிகாப்டர் தளம் ஏதுவாக உள்ளதா என சோதனை நடைபெற்று வருகிறது.  அதனைத் தொடர்ந்து  பிரதமர் மோடி இறங்கவுள்ள ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை வரை வாகன ஒத்திகை நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.