”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!

பிரதமர் மோடி,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாக மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது ஆழ்ந்த வெறுப்பு உள்ளது. ஒன்று மகாத்மா காந்தியின் கொள்கைகள். மற்றொன்று ஏழைகளின் உரிமைகள்.

மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வடிவமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) திகழ்கிறது. கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஒரு உயிர்நாடியாக இருந்து வரும் இத்திட்டமானது, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் இருந்தது.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடியின் அரசாங்கமானது இந்த திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இன்று பிரதமர் மோடி,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது மூன்று அடிப்படைக் கொள்கைகளின் மீது உருவாக்கப்பட்டது. அவை,

1. வேலைவாய்ப்புக்கான உரிமை – வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும்.
2. கிராமங்கள் தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதற்கான சுயாட்சி.
3. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% மத்திய அரசால் வழங்கப்படும்.

இப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவியாக மாற்ற விரும்புகிறார்:

1. வரவு செலவுத் திட்டங்கள், திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் கட்டளையிடப்படும்.
2. மாநிலங்கள் செலவில் 40% ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.
3. நிதி தீர்ந்துவிட்டால், அல்லது அறுவடைக் காலங்களில், தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும்.

இந்த புதிய மசோதாவானது, மகாத்மா காந்தியின் இலட்சியங்களுக்கு நேரடியான அவமதிப்பாகும். பெரும் வேலையின்மை மூலம் இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த மோடியின் அரசாங்கம் இப்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை குறிவைக்கிறது. சாதாரண மக்கள் முதல் நாடாளுமன்றம் வரை, இந்த மக்கள் விரோத மசோதாவை நாங்கள் எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.