அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.  அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் பிரதமர் மோடியை வரவேற்றார்.  பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சர்மாதான் கேப்டன் – ஜெய் ஷா உறுதி!

இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர்,  இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை-அபுதாபி ஷேக் சையத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவுக்கு அருகில் உள்ள அபு முரைகாவில்,  அந்நாட்டு அரசு நன்கொடையாக அளித்த 27 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.700 கோடி செலவில் பிரமாண்டமான இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், “பிஏஎப்எஸ்’ சுவாமிநாராயண் சம்ஸ்தாவால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையில்,  அபுதாபியில் கட்டப்பட்டுள்ள, இந்த முதல் இந்து கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.  இந்து கோயில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துக்கான கலையை விவரிக்கும் இந்திய வாஸ்து பாரம்பரிய கட்டுமான அறிவியலின்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானத்தில் உலோகம் பயன்படுத்தப்படவில்லை.

கோயில் அடித்தளத்தில் நிரப்புவதற்கான கான்கிரீட் கலவையில் 55 சதவீத சிமென்ட் பயன்பாட்டைத் தவிர்க்க,  சாம்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதேபோல், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் தீவிர வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு நானோ டைல்ஸ் மற்றும் தடிமனான கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளோம் என இந்த கோயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.