தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் மக்கள் சந்திப்பு, கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை உள்ளிட்ட பணிகளில் முழு வேகத்தில் இறங்கியுள்ளன.
மாநிலத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில் அண்மையில் அன்புமணி தரப்பு பாமக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்தன.
இதனை தொடர்ந்து இன்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி உரையாற்றும் இந்த கூட்டத்தில் என்.டி.ஏ வில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழ் நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், தமிழ் நாடு அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோரும் அதிமுக, அமமுக, பாமக தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் பொதுகூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.







