இந்தோனேசிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, போண்டியானாக் நோக்கி புறப்பட்ட “ஸ்ரீவிஜய” விமான நிறுவனத்துக்கு சொந்தமான, போயிங் 737 ரக பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்துள்ளது. ஜாவா கடலில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகள் சிலரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, விமானத்தின் பாகங்களை தேடுதல், பயணிகள் நிலை குறித்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், இந்தோனேஷியா விமானம் எதிர்பாரத விதமாக விபத்துக்கு உள்ளானதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார். இந்த துயரமான தருணத்தில் இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும், என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.







