கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://twitter.com/narendramodi/status/1604539877152165889
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த வெற்றியால் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் கால்பதித்த பிரான்ஸ் அணியும் தங்களது திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1604552501612933120
இதேபோல், கத்தார் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த ஆட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அணியின் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.







