“மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்

இன்று விச்சரிக்கப்பட இருந்த மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் உள்ளிட்ட குள்றுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல பீகாரில் போராடிய மாணவர்களை கலைக்க ஏகே-47 ரக துப்பாக்கிகள் பயண்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விகாஸ் சிங் மற்றும் பவுசியா ஷக்கில் ஆகியோர் ஆஜராகி, “ மாணவர் போராட்டத்திற்கு மிக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் போராட்டத்தின் போது ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பீகாரிலும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தி இருக்கிறார்கள். அதே போல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன” என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, அதனை மறுக்க முடியாது. ஆனால் தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காக காவல்துறையின் வரம்புமீறிய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள், குறிப்பாக பலர் போராட்டக்காரர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ஒவ்வொரு தனிமனிதனின் உயிரும் முக்கியமானது. போராட்டத்துக்கென ஒரு நடைமுறை இருக்க வேண்டும். அதற்கான உரிய இடவசதி இருக்க வேண்டும், அமைதி வழி போராட்டத்துக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது. ஆனால், போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பதில்லை. ஜனநாயக செயல்முறைக்கு சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் தேவை என தெரிவித்தார். மேலும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக ஏராளமான மனுக்கள் வந்த வண்ணம் உள்ளது எனவே இந்த மனுக்கள் நாளை விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.