இந்தியா உலகிற்கே முன் மாதிரியாக விளங்குவதாகவும், எந்தவொரு சவாலும் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.
எம்.பி.க்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. டிசம்பர் மாதம் நடைபெற இருந்த குளிர்கால கூட்டத் தொடரும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியது.
2021ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பமானது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி குதிரைப் படையினர் புடை சூழ நாடாளுமன்றத்திற்கு வந்தார் ராம்நாத் கோவிந்த். அவரை பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவையில் சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஒற்றுமையே நமது நாட்டின் பலமாக உள்ளது. அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நிலநடுக்கம், பெரு வெள்ளம், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் பெரும் உயிரிழப்பை தடுத்தது. அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. எந்தவொரு சவாலும் இந்திய வளர்ச்சியை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்தியா தற்போது உலகிற்கே முன் மாதிரியாக விளங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் பலரும் பயனடைந்துள்ளனர் என்றும், பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசின் கொள்கைகள் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறதென்றும், ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் 6 மாநில மக்கள் பயனடைந்துள்ளனர். சுயசார்புடன் இருப்பதே இந்தியாவின் தாரக மந்திரம். புலம் பெயர் தொழிலாளர்கள் மீது மத்திய அரசு தனி கவனம் கொண்டுள்ளதாகவும் தனது உரையில் குடியரசுத் தலைவர் விவரித்தார்.
மேலும், உயர்கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் பயன்கள் குறைக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் துறையை நவீனப்படுத்துவதால் கூடுதல் பயன்களும், உரிமைகளும் கிடைத்துள்ளன. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உரையாற்றினார்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்தன.







