அரிசி – பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்தி மக்களை ஏமாற்றுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார்.
மின்சார கட்டண விலை உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு
உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆர்ப்பாட்டத்தில், கேஸ் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். அரிசி, பருப்பு மீதான ஜிஎஸ்டி வரியை கைவிட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, முழக்கம் எழுப்பிய வெள்ளையன், அரிசி, பால், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசு உயர்த்திவிட்டு திட்டுமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் வலியுத்தினாலும், ஆட்சியாளர்கள் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் நினைப்பார்கள். தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவார்கள். வணிகர் சங்கங்களின் கோரிக்கை வெற்றி பெறும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அடுத்தகட்ட போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். தமிழக மக்களுக்கிடையே போராட்ட உணர்வு பற்றி எறியதான் போகிறது. நாங்கள் தற்போது பற்றவைத்து உள்ளோம்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய வெள்ளையன், தமிழ்நாட்டில் அன்னிய
ஆதிக்கத்தை காந்திய வழியில் முறியடிக்க வேண்டும். வெளிநாட்டு
தயாரிப்புகளை ஆதரிப்பவர்களை ஆதரிக்கக் கூடாது. அதற்கு பொதுமக்கள் முன்வர
வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா