நாளை மணிப்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மணிப்பூர் மாநிலத்திற்கு செல்கிறார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, டிசம்பர் 11 மற்றும் 12, 2025 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

“டிசம்பர் 11 ஆம் தேதி, மணிப்பூ தலைநகர் இம்பாலுக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் வரலாற்று சிறப்புமிக்க மாபல் காங்ஜீபங்கிற்குச் சென்று போலோ கண்காட்சிப் போட்டியைக் காண்கிறார். அதே நாள் மாலையில், இம்பாலில் உள்ள நகர மாநாட்டு மையத்தில் மணிப்பூர் அரசு நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடக்க விழாவும் நடத்துகிறார்.
டிசம்பர் 12 ஆம் தேதி, இம்பாலில் உள்ள நுபி லால் நினைவு வளாகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் மணிப்பூரின் துணிச்சலான பெண் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் தொடங்கி வைக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் இருவேறு சமூகங்களுக்கு இடையே  ஏற்பட்ட  மோதல்களில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் மாநில அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.