உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

உதயநிதியின் கைது ஆங்கிலேயரின் வாய் பூட்டு சட்டத்திற்கு இணையானது என்று பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும்.

ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.