இடப்பிரச்சனையைப் பூஜை மூலம் தீர்த்து வைப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த நபரிடம் 15 சவரன் தாலிக்கொடி மற்றும் 25 லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா என்பவரின் தாய்க்குச் சொந்தமான காலியிடம் ஊரப்பாக்கத்தில் பிரச்சினையிலிருந்துள்ளது. இந்நிலையில், கோவை செல்வ புரத்தைச் சேர்ந்த பூசாரி பிரசன்னா (49) என்பவர் கருப்பையாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் தலைவராக உள்ள பூசாரி பிரசன்னா, அந்த இடத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதாகக் கூறி கருப்பையாவிடம் பூஜைகள் என்ற பெயரில் 25 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாயைப் பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் பூஜை செய்ய வேண்டும் எனக் கூறிய பூசாரி பிரசன்னா அதன் பின்னர் மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் எனவும் அதற்குக் கருப்பையா மனைவியின் தாலிக்கொடி வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பிய கருப்பையா தன்னுடைய மனைவியின் 15 பவுன் தாலிக்கொடியைப் பெற்று பூசாரியிடம் கொடுத்துள்ளார். பணத்தையும் தாலி சங்கிலியையும் பெற்றுக்கொண்ட பூசாரி பிரசன்னா எந்த பூஜையும் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததோடு, இடப்பிரச்சையையும் தீர்த்து வைக்காமலிருந்துள்ளார். இது குறித்து கருப்பையா கேட்டதால், ஆத்திரமடைந்த பிரசன்னா தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘1,302 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!’
இதனால், அதிர்ச்சியடைந்த கருப்பையா இது தொடர்பாக செல்வ புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பூசாரி பிரசன்னா மற்றும், உடந்தையாக இருந்த அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.