காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 2014 மக்களவை தேர்தலில் பாஜக தொடங்கி 2021 தமிழ்நாடு சட்டமன்றத்…

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

2014 மக்களவை தேர்தலில் பாஜக தொடங்கி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார். பல்வேறு கட்சிகள் தற்போது தங்களுக்கு தேர்தல் வியூகம் வகுக்க அவரை நாடி வருகின்றன. அகில இந்திய அளவில் 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சியான காங்கிரஸ் கடந்த 2 மக்களவை தேர்தல்களிலும் பெரும் சரிவையே சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்துவிட்டதாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இணைய இருப்பதாகவும், 2024 தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுத்துக்கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பலவீனம் என்ன, கட்சியை எப்படி பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அறிக்கை அளித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய உள்ளார் எனும் செய்தி நாடு முழுவதும் உற்றுநோக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பு பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு கட்சி சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியில் 2024 மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வியூக வகுப்பு குழுவில் என்னை இணைத்து கொள்ளும்படி கட்சி கேட்டுக்கொண்டது, ஆனால் நான் நிராகரித்து விட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு என் தேவையை விட கட்சிக்கு ஒரு தலைமையும், கூட்டாக செயல்பட்டு கட்சியின் அடிமட்ட அளவு வரையிலான உள்கட்டமைப்பு சீர்திருத்தமே தேவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.