“நான் பசு கோமியத்தை குடிக்கிறேன்” பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்!

“நாம் நாட்டு பசு கோமியத்தை தினமும் குடித்து வந்தால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல் சீராகும் என பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார். போபால் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி…

“நாம் நாட்டு பசு கோமியத்தை தினமும் குடித்து வந்தால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல் சீராகும் என பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார்.

போபால் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர்,“ நான் கடுமையான வலியிலிருந்தபோது தினமும் பசு கோமியத்தை குடிக்கத் தொடங்கினேன். அதனால் தற்போது நான் எந்த மருந்தையும் கொரோனாவுக்காக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

பசு கோமியத்தால் நுரையீரல் பாதிப்பை தடுக்க முடியும். எனக்கு உடலில் கடுமையான வலி இருந்த போது நான் தினமும் பசு கோமியத்தை குடித்து வந்தேன். இதனால் தற்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு கொரோனா நோய் தொற்றும் இல்லை. பசு கோமியம் உயிர் காக்கும் மருந்தாகும்” என அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோய் தொற்றிலிருந்து பசு கோமியம் பாதுகாக்கும் என்ற கருத்தை மருத்துவர்கள் தொடர்ந்து மறுத்துவருகிறார்கள்.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், “பசு கோமியம் கொரோனா நோய் தொற்றையோ அல்லது மற்ற நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

பிரக்யா தாக்கூர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பசு கோமியத்தால் தன்னுடைய மார்பக புற்றுநோய் குணமாகியது என்ற சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரக்யா அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.