தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒருவர் எனக் கூறப்படுபவர் துளசி அய்யா வாண்டையார். பெரும் நிழக்கிழார். முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பரான இவர், தீவிர காந்தியவாதி. எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த துளசி அய்யா வாண்டையார், தஞ்சையில் பூண்டி புஷ்பம் கல்லூரியைத் தொடங்கி மாணவர்கள் கல்வி பெற உதவியுள்ளார்.
1991-1996 வரை தஞ்சை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த இவர், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த துளசி அய்யா வாண்டையார், வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான பூண்டியில் நடக்கிறது.
துளசி அய்யா வாண்டையார் மறைவை அடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துளசி அய்யா வாண்டையார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். அவரை இழந்துவாடும் அண்ணன் அய்யாறு வாண்டையார் மற்றும் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
பாமக நிறுவன ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கலில், தமிழகத்தின் பெருநிலக்கிழார்களில் ஒருவர். இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் காமராசர், இராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகியவர் துளசி அய்யா வாண்டையார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். பூண்டி பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவியர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.







