அரசு அலுவலகங்களில் மாட்டு சிறுநீர் மூலம் தயாரிக்கப்பட்ட பினாயிலை பயன்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய பிரதேச பொது நிர்வாகத் துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், அனைத்து விதமான அரசு அலுவலகங்களிலும் வேதியியல் முறையிலான பினாயிலுக்குப் பதிலாக மாட்டுச் சிறுநீர் மூலம் தயாரிக்கப்பட்ட பினாயிலை பயன்படுத்தியே வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பொது நிர்வாகத் துறைச் செயலாளர் நிவாஸ் சர்மா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக பசு அமைச்சரவை என தனியாக ஒன்று உருவாக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நடந்த முதல் பசு அமைச்சரவைக் கூட்டத்தில் மாட்டு சிறுநீர் பினாயிலை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக கால்நடைத் துறை அமைச்சர் பிரேம் சிங் படேல், மாட்டு சிறுநீரை பாட்டிலில் நிரப்பும் ஆலைகளையும், மாட்டு சிறுநீர் பினாயில் தயாரிக்கும் ஆலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இனி பால் கொடுக்காத மாடுகளை மக்கள் கைவிடமாட்டார்கள் எனவும், இதனால் மத்திய பிரதேசத்தில் பசுக்களின் நிலை உயரும் எனவும் அவர் கூறினார்.
இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் மாட்டு சிறுநீர் பினாயில் தயாரிப்பதைத்தான் மத்திய பிரதேச அரசு ஊக்குவிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ குணால் சவுத்ரி, மாட்டின் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், குறைந்தபட்சம் அதற்காக சில ஆலைகளையாவது உருவாக்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.