கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். கேரள…

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அமைச்சரவை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயராகவன், 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை கேரள அரசில் இடம்பெறுகிறது என்றும் கொரோனா காரணமாக, வரும் 20 ஆம் தேதி எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் இதில் குறைவானவர்களே கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கான இலாகாக்களை முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.