ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமிக்காக நேற்று முன்தினம் (அக். 26) முதல் நாளை வரை 4 நாள்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வனத்துறை வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.







