தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வேண்டும் என விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வானது அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர்,தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவினால் கே.ஆர்.பி அனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதன் காரணமாக அங்கு வாழும் மீன்கள் தற்சமயம் செத்து மிதப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தண்ணீரைப் பாசன வசதிக்காகப் பயன்படுத்தும்போது அந்த விளை நிலங்கள் மலட்டுத் தன்மை ஏற்பட்டுப் பாதிக்கப்படும் எனவே தமிழக அரசு ரசாயன கழிவு கலப்பதைத் தடுக்க பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் இதற்காகப் போராட்டங்களை நடத்த விவசாயச் சங்கங்கள் ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்துப் பேசிய அவர் மழை காரணமாகக் குறுவை சாகுபடிபெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும்,பயிர்கள் தண்ணீரில் மிதப்பதாகவும் தெரிவித்த அவர் இரண்டாவது ஆண்டாகத் தமிழக அரசு குறுவை சாகுபடி காப்பீட்டிற்கு ஒப்பந்தம் போடாமல் விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதோடு அரசு பாதிப்புகளை வெளிப்படையான கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன் முல்லைப் பெரியாறு நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு குழு அமைத்து அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தமிழக அரசு இதுவரை முன்வராதது மிகுந்த வேதனை அளிக்கிறது. ரூல் கர்வ் என்கிற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக 142 அடி தண்ணீரைத் தேக்கவிடாமல் கர்நாடக,கேரள அரசு செய்யும் சதிக்குத் தமிழக அரசு துணைப் போகக் கூடாது எனவும் கூறினார். மேலும் வைகை அணை தூர் வாரப்படாததால் தண்ணீர் தேக்க முடியாமல் பாசனத்திற்குத் தண்ணீர் வழங்க முடியவில்லை. தமிழக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் தூர் வார இயலாது என சட்டமன்றத்தில் கூறியிருப்பது முரணானது. நவீன ட்ரெஞ்சிங் முறையில் தூர் வார இயலும் எனவே அரசு அதனைச் செய்ய முன்வர வேண்டும்.
கடந்த ஆட்சியில் நீர்ப் பாசன துறை அமைச்சர் தலைமையில் தண்ணீர் குறித்துப் பேச உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது, அதனை தற்போதைய திமுக அரசு கைவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க அரசு முன்வரவேண்டும் அதற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு வழங்கவேண்டும் எனவும் பேசினார். அதேபோல் திமுக அரசு தேர்தலின்போது விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செய்வதாக வாக்குறுதிகள் அளித்தது, அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினால் திமுக அரசு திசை திருப்பவே செய்கிறது இதனை பகிரங்கமாகவே தெரிவிக்கிறோம்.
திமுக அரசில் அதிகாரிகளுக்கிடையிலேயே போட்டி நிலவுவதாகவும் ஏற்ற தாழ்வு பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். 8 வழிச்சாலை திட்டம் குறித்து தற்போதைய அமைச்சர் முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு திமுக அரசின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்துவிடும்.
பாராந்தூரில் விமான நிலையம் அமைக்க இடம் தர விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள் ஆனால் அரசு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயிகளிடம் இருந்து இடத்தை வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கிறது,அவர்கள் அதனை வைத்து அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள் ஆனால் நிலம் வழங்கிய விவசாயிகள் நிலை வருமானம் இன்றி தவிக்கின்றனர். எனவே அரசு கொண்டுவரும் வளர்ச்சித்திட்டங்களில் விவசாயிகளையும் பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்







