நீங்கள் மக்கள் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

பொறியியல், தகவல் தொழில்நுட்பப் பணியில் பல்வேறு முக்கிய அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் கூட அந்த பணியை கைவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில் முதல்வர் காணொலி…

பொறியியல், தகவல் தொழில்நுட்பப் பணியில் பல்வேறு முக்கிய அதிகாரிகளாக
பணியாற்றியவர்கள் கூட அந்த பணியை கைவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருப்பது
வரவேற்கத்தக்கதாகும் பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில் முதல்வர் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தியபோது கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்
18வது அணியின் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் 927 பேர் பயிற்சி நிறைவு விழா
அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. பயிற்சி உதவி ஆய்வாளர்களின் அணிவகுப்பு
மரியாதையை டிஜிபி சைலேந்திர பாபு ஏற்றுக் கொண்டார்.

நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

பொறியியல், தகவல் தொழில்நுட்பப் பணியில் பல்வேறு முக்கிய அதிகாரிகளாக
பணியாற்றியவர்கள் கூட அந்த பணியை கைவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருப்பது
வரவேற்கத்தக்கதாகும். எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உங்கள்
பணியை செல்படுத்துங்கள். கடமை, திறமை, வீரம் உள்ளிட்ட பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண்டும். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என எதையும் பார்க்க கூடாது. உங்களின் அனைத்து நடவடிக்கையும் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். சாதி, மத பிரச்னைகளை சரியான முறையில் கையாண்டு, ஆரம்பத்திலேயே தீர்த்திட வேண்டும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதில் காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது:

இந்தப் பயிற்சியகம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இங்கு 81 ஐ.பி.எஸ் அதிகாரிகளும், 241 டி.எஸ்.பிக்களும், 4,500 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர். காவல் துறை உங்களிடம் நிறைய எதிர்ப்பார்க்கிறது. இறுதிவரை நேர்மையுடன், தன்னலமற்ற சேவையும், நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என நம்புகின்றேன். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்.

927 பயிற்சி உதவி ஆய்வாளர்களில் 632 பேர் தாலுகா அளவிலும் (447 ஆண்கள், 184
பெண்கள், மற்றும் 1 திருநங்கை), 264 பேர் ஆயுதப் படையிலும் (189 ஆண்கள்
மற்றும் 75 பெண்கள்), 31 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவிலும் ஒரு வருட
காலம் அடிப்படை பயிற்சி பெற்றனர்.

52 வார பயிற்சியில் அவர்களுக்கு தேவையான அறிவு திறமைகள் தொழில் முறை
நடத்தைகள் ஒருமைப்பாடு மற்றும் நேர்மை அதோடு நவீன மற்றும் கணினி மயமாக்கப்பட்ட மாநில காவல் துறையில் உயர்த்தப்பட்ட திறமைகள், நம்பகத்தன்மை, அடிப்படை தீவிரவாதம், நுண்ணறிவு அந்நிய ஊடுருவல், சமுதாய காவல் பணி, தலைமை பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் அதன் பணிகளை நேரடியாக பார்வையிட்டும்
மேலும் நீதிமன்றத்தின் பணிகள் சுகாதாரப் பணியின் பிணக்கூராய்வு பணிகள், சிறார்
சீர்திருத்தப் பள்ளியின் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கற்று
கொடுக்கப்பட்டது.


வெளியரங்கு பயிற்சியாக வழக்கமான கவாத்தோடு சத்தியமங்கலத்திலும், நவீன
ஆயுதங்கள் கையாளுதல், நீச்சல், கராத்தே, யோகா போன்ற பயிற்சிகள்
அளிக்கப்பட்டது.

927 பயிற்சி நிறைவு செய்த உதவி ஆய்வாளர்களில் ஒரே ஒரு திருநங்கை
தேர்வாகியிருந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த சிவன்யா பெண்களுக்கான இட
ஒதுக்கீட்டிலேயே தேர்வானார். திருநங்கைகளுக்கென தனி இட ஒதுக்கீடு
வழங்கினால் அதிகமான திருநங்கைகள் வருவதற்கு உதவியாக இருக்கும் என்றார் சைலேந்திர பாபு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.