#PowerCut | இருளில் மூழ்கிய சென்னை… பொதுமக்கள் கடும் அவதி… திடீர் மின்தடைக்கு காரணம் என்ன?

மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்துள்ளது. சென்னை மணலி துணை மின்நிலையத்தில் 400 கிலோ வாட்…

#PowerCut | Chennai plunged into darkness... What is the reason for the sudden power outage?

மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்துள்ளது.

சென்னை மணலி துணை மின்நிலையத்தில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதாவது, கோயம்பேடு, மதுரவாயல், திருவேற்காடு, அம்பத்தூர், அயப்பாக்கம், திருமுல்லைவாயல், ஆவடி, வியாசர்பாடி, மிண்ட், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இதேபோன்று தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர், பெசன்ட்நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மின் விநியோகம் தடைபட்டது. இந்த மின் தடையினால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். சென்னை மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த அவலநிலை ஏற்பட்டது. தமிழ்நாடு மின்வாரியத்தின் சேவை மைய எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

பிரதான சாலைகள் அனைத்திலும் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. சில பகுதிகளில் ஒரு சில மணி நேரங்களிலேயே மின்சாரம் வந்த நிலையில், பல இடங்களில் இன்று காலை தான் மின்சார விநியோக வந்தது. இதற்கிடையே, சென்னை வாசிகள் எக்ஸ் தளத்தில் ‘POWER CUT CHENNAI’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள TANFEDCO “மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்பட்ட நிலையில், உடனே மாற்று திட்டத்தை ஏற்பாடு செய்து மின்விநியோகத்தை சரிசெய்ததாக” தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.