மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் நடைபெற்ற ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் (Janjatiya Gaurav Diwas) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்றுப் பேசினார். அப்போது, கடந்த பல தசாப்தங்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பின்தங்கியிருந்த பழங்குடியினர் வாழும் பகுதிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதற்காகப் பிரதமரின் PM-JANMAN திட்டம் மற்றும் தர்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்!
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகான மிகப்பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், இதற்கான பெருமை எந்தவொரு தனிப்பட்ட அரசுக்கும் மட்டும் சொந்தமானதல்ல என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது என்றும் கூறினார்.
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வீடுகள், மருத்துவ வசதிகள், மின்சாரம், சுகாதாரம் மற்றும் நிதி உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சித் திட்டங்கள்!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதாகவும், நாடு முழுவதும் 1.75 லட்சத்திற்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக, தொலைதூரப் பழங்குடியினர் பகுதிகளிலும் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்கள் எந்தவிதப் பிணையமும் இல்லாமல் கடன் பெற்று சுயதொழில் மற்றும் வருமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட விருப்ப மாவட்டங்கள் (Aspirational Districts), 500-க்கும் மேற்பட்ட விருப்ப வட்டாரங்கள் (Aspirational Blocks) ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். 100 மாவட்டங்களில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பிரதமரின் கிருஷி தன் தான்ய யோஜனா திட்டமும் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
நக்சலிசம் ஒழிக்கப்பட்டது முக்கிய சாதனை!
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, 2014-ஆம் ஆண்டில் சுமார் 125 மாவட்டங்கள் நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். அப்போது ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததுடன், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் வன்முறையால் பழங்குடியின மக்களே அதிகம் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய அரசுகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். வன்முறை பாதித்த கிராமங்களில் மக்கள் வாக்களிக்கும் உரிமையைக்கூடப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்ததாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பாதிப்புகளைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது நக்சலிசம் ஒழிக்கப்பட்டுள்ளதால், முன்பு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். சமீபத்தில் பஸ்தார் பகுதியில் தீபாவளியைக் கொண்டாடியதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்தப் பகுதியில் ஏற்றப்பட்ட விளக்குகள் ஒளியை மட்டுமல்லாமல், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
ரூ.3,000 கோடியில் 170-க்கும் மேற்பட்ட திட்டங்கள்!
ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் 170-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 70-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், பழங்குடியினர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
மிசோரம் மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ரோபுய்லியானியின் நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை!
பழங்குடியின மக்களின் வரலாற்றையும், நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பையும் நினைவுகூர்ந்த பிரதமர், பிர்சா முண்டா, தீரோத் சிங், சிதோ-கான்ஹு, ராணி கைதின்லியு, தாந்தியா பில், அல்லூரி சீதாராம ராஜு, ராணி துர்காவதி உள்ளிட்ட வீரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினார். 2021-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 15-ஆம் தேதி ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் கொண்டாடப்பட்டு வருவதாகவும், இது பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைப் போற்றும் நாடு தழுவிய கொண்டாட்டமாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், கோடிக்கணக்கான மக்கள் அதில் பங்கேற்றதாகவும் கூறினார். மேலும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பழங்குடியினத் தலைமைத்துவத்தின் வளர்ச்சிக்கு அடையாளமாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15-ஆம் தேதியை அதிக உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்றும், பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள பழங்குடியினர் நலன் சார்ந்த இலக்குகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயித்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.




