மேகதாது அணை விவகாரம் : கர்நாடக  முதல்வரின் பேச்சுக்கு சிபிஐ கண்டனம் !

மேகதாது அணை விவகாரம் குறித்த கர்நாடக  முதல்வரின் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்  தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி ஆற்றின்  குறுக்கே மேகதாது என்று இடத்தில் அணைகட்டும் முயற்சியில்  கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இயற்கை வழியில் கர்நாடகத்தில் உருவாகி, தமிழ்நாடு வழியாக வங்கக் கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கல்லணை கட்டப்பட்டது என்பது வரலாறு.

இதன் தொடர்ச்சியாக   சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு சமஸ்தான அரசுக்கும்   இடையில் 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

இதன்படி 1974 ஆம் ஆண்டின் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, புதிய ஒப்பந்தம்  போடப்பட்டிருக்க வேண்டும்.

இரு மாநிலங்களுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும்,  கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், ஒன்றிய அரசின் சார்பு தன்மை மற்றும் அலட்சியத்தாலும் தீர்வு எட்டப்படாத நிலையில் 1956 ஆம் ஆண்டு மாநிலங்களிடையிலான நதிநீர் தாவாச்  சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், காவிரி ஆற்றின் நீராதாரத்தை அடிப்படையாக் கொண்டு குடிநீர் வசதி பெற்றுள்ள மாவட்டங்களும் தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமைக்காக போராட்டங்களை முன்னெடுத்தன.

1989 ஜூன் 12  ல் நடைபெற்ற தஞ்சை முதல் வேதாரண்யம் வரையிலான  110 கிலோ மீட்டர் தூரம் வரை அமைந்த  மாபெரும் மனிதச் சங்கிலி  போராட்டம்  குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு, திரு வி. பி .சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி ஒன்றிய அரசு  நடுவர் மன்றம் அமைத்தது.
நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன் மீதான மேல் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பு வழங்கியது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் காவிரி ஆற்றின் நீரோட்டத்தில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என திட்டவட்டமாகவும், தெளிவுபடவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவது அப்பட்டமான அடாவடித்தனமாகும். பெங்களூரு பெருமாநகரின் எதிர்காலக் குடிநீர் தேவை என கர்நாடக மக்களை தவறாக வழிநடத்தி, நீதிமன்றத் தீர்வுகளுக்கும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும்,
இருமாநில நல்லுறவுகளுக்கும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு   எதிராகவும்  செயல்படுவது பொறுப்பற்ற செயலாகும்.

இப்போது நாட்டின் பிரதமர் முன்னிலையில், கர்நாடக முதலமைச்சர்  சிவகுமார் ” மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.எந்த கண்டனங்களுக்கும் அஞ்சமாட்டோம் ” என பேசியிருப்பது வரம்பு மீறிய செயலாகும் என்பதால், அவரது பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி வழங்கிடக் கூடாது என ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.