நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இதனிடையே, மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
கடந்த போட்டியில் டக் அவுட் ஆன கோலி, ரோகித் ஆகியோர் இந்தப் போட்டியில் மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதேபோல், ருத்துராஜ் கெய்க்வாட்டும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் மற்றும் இஷன் கிஷன் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் தலா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதியாகக் களமிறங்கிய சிராஜ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் அடித்தார். அதேபோல், வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து 14 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், இந்திய அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி மற்றும் மிட்சேல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டீன் ஃபாக்ஸ்க்ராஃப்ட் 31 ரன்கள் எடுத்தார். நிக் கெல்லி, மிட்சேல் சான்ட்னர் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நபி, யஷ் மற்றும் நமந்தீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-3 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.




