போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை ரோந்துப் பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரால் 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சலீம் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் விழிஞ்சம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், டிஜிட்டல் ஆவணங்கள், போதைப்பொருள் கடத்தலுக்கான ஆவணங்கள், 80 லட்ச ரூபாய் ரொக்கம், ஒன்பது கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் விக்னேசபெருமாள் என்ற விக்கி, அய்யப்ப நந்து, செல்வகுமார் ஆகிய 3 இந்தியர்களும் மற்றும் குணசேகரன் என்ற குணா, பூக்குட்டி கண்ணா என்ற புஷ்ப ராஜா, உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானை சேர்ந்த சலீம் என்பவர் பல்வேறு வெளிநாட்டு வாட்ஸ் அப் எண்களை பயன்படுத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.
தொழில்நுட்பரீதியாக கண்டுபிடிக்க முடியாத வண்ணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் தங்கம் ஆகியவை இந்த போதைப் பொருள் வியாபாரத்திற்காக ஹவாலா முறையில் சென்னையிலிருந்து இலங்கைக்கு பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் செய்ய பணப் பரிவர்த்தனைக்கு கிரிப்டோ கரன்சியும் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.







