பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடம் ஆன நிலையில், இப்போது கரன்சி புழக்கமும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் கருப்புப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பிரதமர் மோடி, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் மூலம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் பணபதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பணப்புழக்கம் அதிகரித்திருப் பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி 17.74 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் அக்டோபர் 2021 -ல் 29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 30, 2020-ல் 26.88 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், ஒரே வருடத்தில் அதாவது அக்டோபர் 29, 2021-ல் 2, 28,963 கோடி நோட்டுகள் புழக்கத்துக்குள் வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2020-21 நிதியாண்டில் புழக்கத்துக்கு வந்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 7.2 சதவிகிதமும் பணத்தின் மதிப்பு 16.8 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் முறையே 6.6 சதவிகிதமாகவும் 14.7 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணப்புழக்கம் ஒரு பக்கம் அதிகரித்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்திருக்கிறது. கிரெடிட்/ டெபிட் கார்டு, யுபிஐ உள்ளிட்ட இணைய வழி பணப்பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









