மண்ணைவிட்டு மறைந்தாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் வரிசையில் கவிஞரும் எழுத்தாளருமான கா.மு.ஷெரீப் ஒருவர்.
“பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ – இந்தப்பாடலை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய்மறக்கிறோம். “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப்போகுமா?’, “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ இதுபோன்ற திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப்.
லட்சத்துக்காக எழுதாமல், லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதிய கவி.கா.மு.ஷெரீப்,
பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர்.
திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். “சிவலீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்; “பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி.கா.மு.ஷெரீப். “”அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி’ என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.
கவிதைகள் மட்டும் எழுதவில்லை, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப். உமறுப்புலவர், கா.பா.செய்குத்தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல்காதர் போன்றோருக்குப் பிறகு கவி.கா.மு.ஷெரீப் முக்கியமானவர்.
ம.பொ.சி.யின் தமிழ்அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்து “தமிழகக் களக்கவிஞர்’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது. சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களிடம் பாராட்டுப்பெற்றதோடு திரு.வி.க. விருதும் பெற்றார்.
தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான “காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக்கொண்டார். அவரது நூல்கள் சில நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ் உள்ளவரை கா.மு.ஷெரீபின் பெயரும் நிலைத்து நிற்கும், நின்று ஒலிக்கும்.










