கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட அதிகமான மின் வெட்டால்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரங்களை ஆளும் பாஜக மற்றும் காங்கிரசு கட்சி தற்போது இருந்தே தொடங்கிவிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரசு மின்சாரம், கல்வி உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. இதற்கு போட்டியாக பாஜக வும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் ஒருபகுதியாக பாஜக ”சங்கல்ப்ப யாத்திரை” எனும் பெயரில் பேரணியை நடத்தி வருகிறது. இந்த பேரணியில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார். வாகனத்தில் இருந்தபடி பேரணியாக சென்ற பிரகலாத் ஜோஷி கட்சியினர் மத்தியிலும் பேசினார்.
அவர் தெரிவித்ததாவது.. “ தற்போது இலவச மின்சாரம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் ஆட்சி காலத்தில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை. அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால்தான் கர்நாடகத்தில் மக்கள் தொகை அதிகரித்தது” என தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-யாழன்